முன்னதாக லக்கிம்பூர் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர் சந்திப்பின்போது, ராகுல் காந்தி, தான் லக்கிம்பூர் செல்ல உள்ளதாகக் கூறியிருந்தார்.
மேலும், உழவர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் (ஞாயிற்றுக்கிழமையன்று) திட்டமிட்டது. இந்த விவகாரத்தை எழுப்புவது உங்களது (ஊடகம்) பொறுப்பு. ஆனால் நாங்கள் இந்த விவகாரத்தை எழுப்பினால் அரசியல் செய்வதாகக் கூறுகிறார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.
உழவர் கொல்லப்படுகின்றனர், இந்தியாவில் இப்போது 'சர்வாதிகாரம்' நிலவிவருகிறது என்றும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார் ராகுல்.
முன்னதாக, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா, "பிரியங்காவைக் கைதுசெய்யம்படி எந்த உத்தரவும், அறிவிப்பும் வழங்கப்படவில்லை. நீதிபதி முன் பிரியங்கா முன்னிறுத்தப்படவில்லை. மேலும் அவரின் சட்ட ஆலோசகரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
நான் லக்னோ செல்ல விமான நிலையத்திற்குச் சென்றபோது அங்கு என்னை அனுமதிக்கவில்லை. ஒரு கணவனாக என் மனைவிக்கு என்னால் நேரில் சென்று பார்த்து உதவ முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது" எனத் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில்தான் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தின் உள் துறை, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஐந்து பேர் லக்கிம்பூர் செல்ல அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் உழவர் நால்வர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணம் ஒன்றிய இணை அமைச்சரின் மகன் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதையும் படிங்க: லக்னோ செல்லும் பிரதமர் ஏன் லக்கிம்பூர் செல்லவில்லை? - ராகுலின் உழவர் உரிமைக்குரல்