டெல்லி தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கு பெரும் தலைவலியாக உள்ளது. கடந்த 2021 - 22ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசால் வெளியிடப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும், அதனால், சில தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு கைமாறாக அரசியல் கட்சியினர் பெரும்தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் வரை சம்பந்தப்பட்டு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை செய்தார்.
முறைகேடு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இதே விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்து உள்ளதாகக் கூறி அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து தனியாக விசாரித்து வருகிறது. இந்தப் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான மதுபானத் துறையை தன் வசம் வைத்து இருந்த டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு தொடர் நீதிமன்ற விசாரனையில் வைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி திகார் சிறையில் மணீஷ் சிசோடியா அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த சில நாட்களுக்கு முன் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். இரண்டு நாட்கள் விசாரணை ஆணையம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கின் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சமர்ப்பித்த நிலையில் அதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பெயர் இணைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன் மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் முதல்முறையாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை குற்றவாளி எனக் கூறி இருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா பெயர் இணைக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் அமலாக்கத்துறை தக்கல் செய்த துணை குற்றப்பத்திரிக்கையில் தனது பெயர் இல்லை என ராகவ் சத்தா தெரிவித்து உள்ளார். அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் தனது பெயர் இருப்பதாக எழுந்த செய்திகளை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகவ் சத்தா, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தனது பெயர் இல்லை எனத் தெரிவித்தார்.
டெல்லி மதுபானக்கொள்கை முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தனது பெயர் இருப்பதாக காலை முதல் செய்திகள் வெளியாகி வருவதாகவும், அது முற்றிலும் தவறானது என ராகவ் சத்தா தெரிவித்தார்.
இதையும் படிங்க : Modi surname case: ராகுலின் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!