குஜராத்தில் உள்ள கேவாடியாவில், 80 ஆவது அகில இந்திய நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நவ. 25, 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில், குடியரசு தலைவர் ராம்நாத் கேவிந்த், துணைக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவையின் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை மற்றும் மாநாட்டின் தலைவர் ஓம் பிர்லா, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர், வி.பி. சிவக்கொழுந்து ஈடிவி பாரத்திடம் பேசிய போது, "சட்டபேரவைத் தலைவர், துணைத் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து வந்திருக்கிறேன். சட்டத்தை நிலை நிறுத்துவதற்காக சட்டப்பேரவைத் தலைவர்களும், அதை செயல்படுத்துகின்ற அரசு அதிகாரிகளும், சட்டம் வழுவாமல் பாதுகாக்கின்ற நீதிபதி அவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால், உண்மையான ஜனநாயகத்தைப் பேணிகாக்க முடியும்.
மக்கள் அனைவரும் ஜனநாயகத்திற்கு உட்பட்டு அதை காப்போமானால் நம்முடைய பாரதம், மிகச் சிறந்த ஒரு நிலையை அடையும். அது இந்த தேசத்திற்காக விடுதலை வாங்கித் தந்த தியாகிகளுக்கு செய்கின்ற சிறப்பு என்பதை நான் இந்த நேரத்திலே கூறிக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். நீதிவழுவாமல் ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டும், அதுதான் ஜனநாயக நாட்டின் முக்கிய கடமையாக இருக்கிறது.
நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்களின் மாநாடு இங்கே 25, 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மிகச் சிறப்பாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில், அத்தனை சட்டப்பேரவைத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதில் நமது பாரத பிரதமரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். மிகவும் சிறப்பான இந்த நிகழ்ச்சியை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய தொலைக்காட்சிக்கு என்னை பேட்டி கண்டதற்கு நன்றி என்றார்
இதையும் படிங்க: புதுச்சேரியில் 206 நிவாரண முகாம்களில் 1000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் - மாவட்ட நிர்வாகம்