டேராடூன் (உத்தரகாண்ட்): உத்தரகாண்ட் மாநிலத்தின் 12ஆவது முதலமைச்சராகப் புஷ்கர் சிங் தாமி இன்று (மார்ச் 23) பிற்பகல் 2.30 மணிக்கு பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் குர்மீத் சிங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
46 வயதான புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக உத்தரகாண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார். இவருடன் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாஜகவின் முக்கியத்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அங்கு தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் முதலமைச்சராக பாஜக தலைமையால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை (மார்ச் 21) டேராடூனில் நடைபெற்ற புதிதாக தேர்வு செய்யப்பட்ட அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதலமைச்சராக தொடர வேண்டுமானால், அடுத்த 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எல்எல்ஏ ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
பதவியேற்பதற்கு முன்பாக, புஷ்கர் சிங் தாமி ரேஸ் கோர்ஸ்-இல் உள்ள குருத்வாரா மற்றும் டேராடூனில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் வழிபாடு செய்தார்.
இதையும் படிங்க: தேர்தலில் தோல்வியுற்றாலும் புஷ்கர் சிங் தாமி பாஜகவின் முதலமைச்சர் தேர்வானது எப்படி?