டெல்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்பதால், பிரதமர் மோடி, மத்திய பாஜக அமைச்சர்கள், பாஜக முதலமைச்சர்கள் என பாஜகவினர் அனைவரும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்டப் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொது சிவில் சட்டம் பொருந்தாது என்றும், இதனை அமல்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த சூழலில், உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப்போவதாகவும், வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று(ஜூலை 4) டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புஷ்கர் சிங் தாமி, "ஹரித்வார்-ரிஷிகேஷ் மறுமேம்பாட்டு திட்டம், தொழில் பூங்கா உள்ளிட்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். ஜோஷிமத் பிரச்னை, ஜிஎஸ்டி வசூல் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம்" என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள், இந்தச் சந்திப்பில் பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தாமி, "பொது சிவில் சட்டம் மற்றும் அதன் விதிகள் பற்றி பிரதமருக்கு எல்லாம் தெரியும். நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து. உத்தரகாண்ட் மாநிலத்தில் தாமதமின்றி விரைவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், அதற்கான வரைவு அறிக்கையை நிபுணர் குழு விரைவில் தாக்கல் செய்யும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "பயங்கரவாதம் குறித்து இரட்டை பேச்சு.." பாக். பிரதமரின் வாயை அடைத்த பிரதமர் மோடி!