சண்டிகர்: இந்தியாவிலிருந்து பஞ்சாபை பிரித்து "காலிஸ்தான்" என்ற தனி நாடு உருவாக்க வேண்டும் என சீக்கியர்கள் பலர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக இந்தியா மட்டுமல்லாமல் சில வெளிநாடுகளில் இருந்தும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாபில் "வாரிஸ் பஞ்சாப் டி" என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்காக தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் அந்த அமைப்பினரை தேடி வந்தனர்.
கடந்த மாதம் அம்ரித் பால் சிங்கின் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். அப்போது, அம்ரித் பால் சிங் தனது உதவியாளரை விடுதலை செய்யக்கோரி கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தியபடி தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அம்ரித் பால் சிங்கில் உதவியாரை போலீசார் விடுவித்தனர்.
பின்னர், அம்ரித் பால் சிங்கையும் அவரது கூட்டத்தையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த 19ஆம் தேதி அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்ய முயன்றபோது அவர்கள் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் அம்ரித்பாலின் உறவினர் ஹர்ஜித் சிங், அவரது உதவியாளர்கள் தல்ஜித் சிங் கல்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் மற்றும் பகவந்த் சிங் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அம்ரித் பால் சிங்கை கைது செய்யவதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19ஆம் தேதி நண்பகல் முதல் 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டன. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அம்ரித் பால் சிங்கின் பின்னணி குறித்தும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். இதில், அம்ரித் பால் சிங் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணியான கிரண்தீப் கெளரை திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்மணி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அம்ரித் பால் சிங்கை கைது செய்ய உதவும்படி பொதுமக்களுக்கு பஞ்சாப் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்ரித் பால் சிங் பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீசார், இந்த புகைப்படங்களை வைத்து பொதுமக்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அம்ரித்பால் சிங் தப்பியோட பயன்படுத்திய கார் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர் குருத்வாரா சென்று உடை மாற்றிக் கொண்டு பிறகு தப்பிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பஞ்சாபில் சட்ட ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பதற்றம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.