அமிர்தசரஸ்: காங்கிரஸூம் உள்கட்சி பிரச்சினையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றால் அது மிகையல்ல. நம்ம ஊர் சத்திய மூர்த்தி பவனில் தொடங்கி, தலைநகர் காங்கிரஸ் அலுவலகம் வரை இந்தத் தீ பற்றி எரிகிறது. இந்தச் சச்சரவுக்கு முடிவே இல்லை.
இதேபோன்ற ஒரு இடியாப்ப சிக்கலில்தான் பஞ்சாப் காங்கிரஸ் தற்போது சிக்கி தவிக்கிறது. அங்கு முதலமைச்சராக உள்ள கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங்குக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இன்று கட்சியை பதம் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
சோனியாவின் மூவர் குழு
இந்தச் சச்சரவை தீர்க்க கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார். அந்தக் குழுவில் மல்லிகார்ஜூன கார்கே, ஹரிஷ் ராவத் மற்றும் ஜேபி அகர்வால் ஆகியோர் உள்ளனர்.
சோனியா அமைத்த இக்குழு கட்சியின் உள்கட்சி பிரச்சினையை தீர்த்து, கட்சியை பலப்படுத்தும் என்று அக்கட்சி தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் முதல் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்நிலையில், குழு முன்பு செவ்வாய்க்கிழமை (ஜூன்1) ஆஜரான சித்து, “பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் மீதான தனது அதிருப்தியை பகிரங்கப்படுத்தினார்.
சச்சரவுக்கு காரணம் என்ன?
தனது கோரிக்கைகளை உரத்த குரலில் கூர்மையாக கூறிய சித்து, “கட்சியின் அழைப்புக்கு கட்டுப்பட்டு வந்துந்துள்ளேன். கட்சியின் நலனுக்காக சில நடவடிக்கைகள் தற்போது தேவைப்படுகின்றன. பஞ்சாப் மக்களின் குரல் திரையை கிழித்துக்கொண்டு வெளிவருகிறது. இம்மக்களின் அடிமட்ட குரலை நான் வெளிக்கொணர்கிறேன். மாநில மக்களின் அதிகாரம் அவர்களிடம் திருப்பி செல்ல வேண்டும். இது என் கடமை” என்றார்.
சித்துவை தவிர எம்எல்ஏ பர்கத் சிங்கும் குழு முன் தோன்றி பேசினார். அப்போது, “பல எம்எல்ஏக்கள் கேப்டன் அமரீந்தர் சிங் மீது புகார் அளித்துள்ளனர்” என்றார். இந்தச் சச்சரவு தொடர்பாக முதலமைச்சரிடமும் குழு விளக்கம் கேட்கலாம் எனத் தெரியவருகிறது. இந்தப் பிரச்சினையை மேலோட்டமாக பார்த்தால் அது கேப்டன் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சித்து இடையேயானது எனத் தெரிகிறது.
நெருக்கம்
ஆனால் உண்மையில் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதிலும் முக்கியமாக குரு கிராந்த் சாகிப் விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக காங்கிரஸ் கருதுகிறது.
இதனால் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகளை இழக்கும் என்று கட்சி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை நினைக்கின்றனர். மேலும் கேப்டன் அமரீந்தர் சிங், சுக்பீர் சிங் பாதலுடன் நெருக்கமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் அவரை மாற்றி புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
விளக்கம்
இந்தக் கோரிக்கை கடந்த சில மாதங்களாக தணிந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. மறுபுறம் கேப்டன் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் இடையே மோதலும் வலுப்பெற்றுள்ளது. இதற்கிடையில் சோனியா அமைத்த குழுவினர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை சந்தித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் கட்சியின் விதி மற்றும் ஒழுக்க விதிகளை கவனத்தில் கொண்டு முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு மத்தியில் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லியில் மூன்று பேர் கொண்ட குழுவினரை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இதனால் பஞ்சாப் அரசியலில் ஆட்டம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க: ஓராண்டாக வேலையில்லை, நிலைமை படுமோசம்- டெல்லி திரும்பிய குடிபெயர் தொழிலாளி வேதனை!