பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் இன்று டெல்லி வந்துள்ளார். இன்று மாலை அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகவும், 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பின் அமரீந்தர் சிங் டெல்லி வருவது இதுவே முதல்முறை. நவ்ஜோத் சிங் சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிப்பதில் அமரீந்தர் சிங்கிற்கு மாறுபட்ட கருத்து இருந்தது.
பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த சித்து அமரீந்தருடன் மறைமுகமாக மோதல் போக்கை கடைப்பிடித்துவந்தார்.
இருவருக்கும் உரசல் இருந்துவந்த நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நெருக்கமான சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்தாண்டு பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யார் அங்கு காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்ற குழப்பம் நிலவிவருகிறது.
இதன் பின்னணியில்தான், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமரீந்தர் சிங் சந்திக்கிறார். எனவே, இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை - மோடி பெருமிதம்