நாடு முழுவதும் நாளை (நவம்பர் 13) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "முன்னெப்போதும் இல்லாத நாடு மிகப்பெரும் அச்சுறுத்தலில் தவித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி அவரவர் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் விழாக்களை கொண்டாட வேண்டும்.
தனி நபர் இடைவெளியை கடைப்பிடித்து நிகழும் கொண்டாட்டங்களால் அவரவர் வீடுகள் ஒளிரும்போது, சமூகமும் ஒளிரும். ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் சிங்கின் வரலாற்று சிறப்புமிக்க விடுதலையைக் குறிக்கும் வகையில் பாண்டி சோர் திவாஸ் (கைதிகள் விடுதலை நாள்) கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு இந்த நாளை கொண்டாட பஞ்சாப் மாநில அரசு இரண்டு மணி நேரம் அனுமதி வழங்கி உள்ளது. கரோனா வைரஸ் பரவல் பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்க சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கோள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "தீபாவளி (நவம்பர் 14) அன்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்கலாம். குர்பூராப் (நவம்பர் 30) அன்று அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரையும் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம். கிறிஸ்துமஸ் தினத்தன்று, மக்கள் இரவு 11.55 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்படுகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.