சண்டிகர்: கடந்த 2015ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் பாதல், முதலமைச்சராக இருந்தபோது குரு கிரந்த் சாகிப் என்னும் சீக்கிய மதகுருவை அவமதித்ததாகக் கூறி பஞ்சாப் ஃபரீத்கோட் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, கோட்காபூரா, பெஹ்பல் கலான் ஆகிய இடங்களில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சுட்டில் இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தியோல் மீதான குற்றச்சாட்டு
பஞ்சாப் அரசின் தலைமை வழக்கறிஞராக ஏபிஎஸ் தியோல் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.
2015 கோட்காபூரா தூப்பாக்கிச்சூடு வழக்கில், குற்றஞ்சாட்டுக்கு உள்ளான முன்னாள் காவல் துறை இயக்குநர் சுமேத் சிங் சைனி சார்பில் தியோல் வாதாடியுள்ளார் எனவும்; அவரை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கக் கூடாது எனவும் சித்து கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தியோல் சில தினங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
நாளை புதிய தலைமை வழக்கறிஞர்
இக்கூட்டத்தில், தியோலின் ராஜினாமா குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பஞ்சாப் முதலமைச்சர்,"அரசு தலைமை வழக்கறிஞர் தியோலின் ராஜினாமாவை ஏற்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மேலும், அமைச்சரவையின் இந்த முடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய தலைமை வழக்கறிஞர் நாளை (நவ. 10) நியமிக்கப்படுவார்" என்றார்.
இதையும் படிங்க: Kotkapura Incident: குற்றப்பத்திரிகை எங்கே - காங்கிரஸ் அரசிடம் சித்து காட்டம்