சண்டிகர் (பஞ்சாப்): பஞ்சாப் அரசின் கோவிட் தடுப்பூசி விளம்பர தூதராக நடிகர் சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் சோனு சூட் உடனான சந்திப்புக்கு பின்னர் இதனை மாநிலத்தின் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்தார்.
இது குறித்து முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறுகையில், “தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்கும், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இவரை விட செல்வாக்கு பொருந்தியவர்கள், பொருத்தமானவர்கள் யாரும் இல்லை. தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் தயக்கம் உள்ளது. இதை நீக்க சோனு சூட்டின் பணி உதவும். கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது கடந்தாண்டு ஏராளமான குடிபெயர் தொழிலாளர்களுக்கு உதவியவர் சோனு சூட்” என்றார்.
மேலும் சோனு சூட்டை, பஞ்சாப்பின் மகன் என்றும் கூறிய கேப்டன் அமரீந்தர் சிங், “பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கு தடுப்பூசி அவசியம், இதனை பொதுமக்கள் உணர வேண்டும். தடுப்பூசி மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்றும் கூறினார். பஞ்சாப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டது குறித்து நடிகர் சோனு சூட், “உயிர் காக்கும் பொருள் ஒன்றுக்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆசிர்வதிக்கப்பட்டது போல் உணர்கிறேன். பஞ்சாப் அரசு ஒவ்வொரு மக்களின் உயிரையும் காக்க பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகின்றது” என்றார். மேலும், “நான் மீட்பர் கிடையாது, மனிதநேயமிக்க ஒரு மனிதன். கடவுளின் திட்டத்தில் ஒரு சிறிய அங்கமாக இருக்கிறேன், எனது கடமைகளை செய்ய கடவுள் வழிநடத்துகிறார்” என்றார்.
இதையும் படிங்க: கோவிட் தடுப்பூசி; அனைத்து மாநில ஆளுநர்களுடன் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நாளை ஆலோசனை!