ஸ்ரீநகர் (புல்வாமா): ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் என்றால், பயங்கரவாதத் தாக்குதல், ராணுவ வீரர்களின் கொலை என்பது தான் நினைவுக்கு வரலாம். துப்பாக்கி முனைகளின் நடுவே பூக்களும் பூக்கத்தான் செய்யும் என்பது போல, ஊதா நிற லாவெண்டர் மலர்களின் சொர்க்கமாக திகழ்கிறது, புல்வாமா. காஷ்மீருக்கே உரிய இயற்கை சூழல், குளிர்ச்சியான கால நிலை, விவசாய நிலங்கள் என அழகியலின் ஆன்மாவை, தன் அகத்தே கொண்டுள்ளது, புல்வாமா மாவட்டம்.
எங்கிருந்து வந்தது லாவெண்டர்?: ஐரோப்பாவில் இருந்து காஷ்மீர் கொண்டுவரப்பட்ட இந்த லாவெண்டர் மலர்கள் இன்று புல்வாமாவின் அடையாளமாக மாறியுள்ளன. மலர்ச்சாகுபடியை ஊக்குவிக்க அம்மாநில அரசும் மானியங்களை வாரி வழங்கி வருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அம்மாநிலத்தில் லாவெண்டர் மலர்ச் சாகுபடி பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியாருக்குச் சொந்தமான தோட்டங்கள் மட்டுமின்றி, அரசுப் பண்ணைகளும் லாவெண்டர் மலருக்காக பிரத்யேகமாக இயங்கி வருகின்றன.
இங்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரும் நிலையில், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கின்றனர். மேலும், CSIR பணியின் கீழ் இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (IIIM) இந்த பண்ணையை எடுத்து நடத்தி வரும் நிலையில், இங்கு மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் குறித்து ஆராய்ச்சியும் செய்யப்பட்டு வருகிறது.
லாவெண்டர் மலர் சாகுபடி குறித்து பேசியுள்ள பௌரா புல்வாமா கள நிலையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஷாஹித் ரசூல், இந்த லாவெண்டர் மலர்கள் பூக்க 8 முதல் 12 மாதங்கள் ஆகும் எனக் குறிப்பிட்டார். மேலும், புல்வாமாவின் கிஷ்த்வார் மற்றும் தோடா பகுதிகள் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் லாவெண்டர் மலர் சாகுபடிக்கு இங்கு சிறந்து விளங்குவதாகவும் அவர் கூறினார்.
அது மட்டுமின்றி ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்து ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யும் இந்த மலர்களுக்கு எவ்வித இரசாயனங்களும் தெளிக்காமல் வளர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயிகள் லாபகரம் மிக்க இந்த லாவெண்டர் மலர்ச் சாகுபடியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், முதலீடு இல்லாமல் இவற்றை வளர்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாவெண்டர் மலர்களின் பயன்: வாசனைப் பொருட்கள், உணவுப்பொருட்கள், வலி நிவாரணி மருந்துகள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பல பொருட்களுக்கு லாவெண்டர் மலர் பயண்படுத்தப்படுகிறது. உலக சந்தைகளில் அதீத வரவேற்பு உள்ள இந்த லாவெண்டர் மலர் அனைத்து காலநிலைகளுக்கும் உகந்தது அல்ல என்பதாலும், குளிர் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்பதாலும் இதன் தேவை என்றும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
உலகை மெய்சிலிர்க்க வைக்கும் லாவெண்டர் மலர்கள்: பண்டைய காலங்களில் எகிப்தியர்கள் சடலங்களை மம்மியாக்க இந்த மலரின் வாசனை திரவியத்தை பயன்படுத்தியதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி, லாவெண்டர் மலர் தூய்மை மற்றும் அமைதியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
தூக்கத்தைத் தூண்டும் லாவெண்டர் எண்ணெய்: இன்றைய காலத்தில் தூக்கம் இன்மை பிரச்சனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பணிச்சுமை, சமூகம் மற்றும் குடும்ப ரீதியான பிரச்சனைகளால் மன உளைச்சல் என பலரும் மருத்துவரை அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படிப்பட்ட பிரச்னையில் சிக்கி தூக்கத்தை தொலைத்து தவித்து வரும் நபர்களுக்கு லாவெண்டர் மலர் ஒரு வரப்பிரசாதம். இதன் எண்ணெய்யை தலைக்குத் தேய்த்து மசாஜ் செய்து கண்களை மூடி உறங்கினால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும் எனவும், மன அழுத்தம் குறையும் எனவும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
லாவெண்டர் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள், பால் உற்பத்தி, மருந்து பண்ணைகளில் மிகவும் பிரபலமான புல்வாமா மாவட்டம் குங்குமப்பூ சாகுபடியில் உலகப் புகழ்பெற்றது. அதேபோல் பால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பதால் காஷ்மீரின் பால்பண்ணை என்றும் புல்வாமா அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறது.
இத்தனை புகழ்பெற்ற புல்வாமா மாவட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அங்கு லாவெண்டர் மலர்ச் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கூடவே, சாமந்தி மற்றும் ரோஜா பூக்கள் சாகுபடியும் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: MP Truck Accident: ஆற்றில் மினி லாரி கவிழ்ந்து: 12 பேர் நிலை என்ன?