புதுச்சேரி: சபாநாயகர் சிவக்கொழுந்து தனது சபாநாயகர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவியை விட்டு விலகுவதாக சிவக்கொழுந்து, துணைநிலை ஆளுநர் தமிழிசைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் எனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு சபாநாயகர் பதவியை விட்டு விலகுவதாகச் சுயநினைவுடன் முடிவு எடுத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காரைக்காலில் நடந்த கூட்டத்தில் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், அவரது மகன் ரமேஷ் ஆகியோர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் இவர் தனது சபாநாயகர் பதவியைத் துறந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து, ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க கோரப்பட்டது. அதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் 3 பேருக்கும் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என முதலமைச்சர் உள்ளிட்டோர் சபாநாயகர் சிவகொழுந்திடம் கோரிக்கை முன்வைத்தனர். ஆனால் அக்கோரிக்கையைச் சபாநாயகர் ஏற்கவில்லை.
மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால், அது தோல்வி அடைந்ததாகச் சபாநாயகர் அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.