புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் பத்து தொகுதிகளையும், பாஜக ஆறு தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்நிலையில் இன்று (மே.3) மாலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்த என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்.
அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, என்.ஆர் காங்கிரஸ், பாஜக எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி அளித்தார். எந்த தேதியில் பதவி ஏற்க விரும்புகிறார்களோ, அப்போது நேரம் ஒதுக்கப்படும்” என்றார்.