புதுச்சேரியில் கரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தவும், 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றவும் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி - குண்டுபாளையம், ஆருத்ரா நகர், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (செப்.30) பார்வையிட்டார்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “புதுச்சேரியில் இதுவரை சுமார் 70 விழுக்காடு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சுமார் பத்து லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதற்காக சுகாதாரத்துறையை பாராட்டுகிறேன். புதுச்சேரியில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொள்ள தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே மூன்றாவது அலையைத் தடுக்கும் என்பதால் மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார்.