புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒவ்வொரு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் திடீரென ஆய்வு மேற்கொள்வார். ஆய்வின்போது பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து நேரடி விளக்கங்கள், விடுபட்ட பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடுவார்.
இதற்கிடையே கரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக ஆய்வு மேற்கொள்வதை நிறுத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று (பிப். 14) அலுவலர்களுடன் புதுச்சேரி போக்குவரத்து அலுவலகம் சென்ற அவர், அங்கு போக்குவரத்து இயக்குநர் சிவக்குமாரை சந்தித்து போக்குவரத்து துறை கணினி மைய பணிகள் குறித்தும் ஆன்லைன் போக்குவரத்து உரிமம் வழங்கும் முறைகளில் உள்ள குறைபாடுகளை களைவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத நபர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்குமாறும் அறிவுறுத்தினார்.
புதுச்சேரியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் முதலமைச்சர் நாராயணசாமி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு தலைக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதனால் காவல் துறையினர் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர். ஆளுநரின் இந்த அதிரடி விசிட் ஆளும்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் பிரதமர் மோடி: செய்திகள் உடனுக்குடன்!