புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக அங்குள்ள நட்சத்திர விடுதிகள், ரிசார்டுகளில் ஆட்டம், பாட்டம் என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு களை கட்டும். மேலும், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுப்பர்.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் கொண்டாட்டத்திற்கு தடையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, புத்தாண்டை வரவேற்க தயாராகும் புதுச்சேரிக்கு பலரும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் புதுவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகள், ரிசார்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் உள்ளூர், வெளியூர் வாகனங்கள் அதிகளவில் வருவதால், நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இதையும் படிங்க: பொள்ளாச்சி சங்கீத சபா: மார்கழி மகா உற்சவ இசை நிகழ்ச்சி