புதுச்சேரி: பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த 163 காவலர்களுக்குப் பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி காவல் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நமச்சிவாயம் காவலர்களுக்குப் பணி ஆணையை வழங்கினர்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த நமச்சிவாயம், “புதுச்சேரியில் காலியாக உள்ள 390 காலிப்பணியிடங்கள் உடனடியாக இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் நிரப்பப்படும். மேலும் லாஸ்பேட்டை, ரெட்டியார் பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கிவருகின்றன.
அந்த இரண்டு காவல் நிலையங்களுக்கும் இந்த ஆண்டிற்குள் சொந்தமாகக் கட்டடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவலர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் புதுச்சேரி அரசு செய்துவருகிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆபரேஷன் விடியல், ஆபரேஷன் திரிசூல் மூலம் புதுச்சேரியில் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதுவரை ஆபரேஷன் விடியலில் 88 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டுள்ளது, இதில் 163 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் காவல் துறையைப் பலப்படுத்தும் வகையில் 300 காவலர்கள், 400 ஊர்க் காவல்படையினர் தேர்வுசெய்யப்பட உள்ளனர். அதற்கான தேர்வு படிப்படியாக நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம்; ஜிஎஸ்டி கணக்கு ரத்து - அமைச்சர் மூர்த்தி