புதுச்சேரி: புதுச்சேரி கணுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவில் வசித்து வந்தவர் செந்தில்குமரன்(45). உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரான இவர், மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில், இவர் நேற்றிரவு (மார்ச்.26) வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு வந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து செந்தில்குமரன் மீது இரண்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒரு குண்டு அவர் மேல் பட்டத்தில் அவர் அங்கேயே நிலைகுலைந்து விழுந்தார்.
இரண்டாவது குண்டு வீசப்பட்டபோது, அப்போது அந்த குண்டு வெடித்ததில் ஏற்பட்ட புகையின் போது தாங்கள் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு செந்தில்குமரனை சரமாரியாகத் தலை மற்றும் கழுத்து பகுதி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், செந்தில்குமரன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு மர்ம நபர்கள் 7 பேரும், விழுப்புரம் சாலையில் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இறந்து கிடந்த செந்தில்குமரனின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், செந்தில்குமரன் உடலை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செந்தில்குமரை உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மர்ம குப்பல் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், இது அரசியல் படுகொலையா? அல்லது சொந்த காரணமாக என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே செந்தில்குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட போது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 'ஓபிஎஸ் 2.0' டெல்டாவில் சுற்றுப்பயணம்.. உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!