..புதுச்சேரி: கடந்த ஜூன் 27ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அதனைத் தொடர்ந்து, நீண்ட நாள்களாகியும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாத நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஜூலை.11) ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து, அமைச்சர்கள் துறை தொடர்பான பட்டியலை வழங்கினர்.
தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, புதிய அமைச்சரவைப் பட்டியல் அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அண்மையில் பதவியேற்ற ஐந்து அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாருக்கு என்ன துறை?
முதலமைச்சர் ரங்கசாமிக்கு கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை, துறைமுகம், அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஐந்து அமைச்சர்களுக்கு தலா ஆறு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சந்திர பிரியங்கா
ஆதி திராவிடர் நலத்துறை, போக்குவரத்து, வீட்டு வசதி, தொழிலாளர் நலத்துறை, கலை மற்றும் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை.
நமச்சிவாயம்
உள்துறை, மின்சாரம், கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் வர்த்தகம், முன்னாள் படைவீரர் நலத்துறை.
சாய் சரவணன் குமார்
நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, டிஆர்டிஏ, சமுதாய மேம்பாடு, நகர்ப்புற அடிப்படை சேவைகள், தீயணைப்பு, சிறுபான்மையினர் நலத்துறை.
க.லட்சுமி நாராயணன்
பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து, மீன்வளம், சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பம், அச்சகம்.
தேனி ஜெயக்குமார்
வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது