புதுச்சேரி அரசு சார்பில் கருவாடிகுப்பம் சித்தானந்தர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை தமிழிசை சவுந்தரராஜன் இன்று திறந்துவைத்தார்.
பின்னர் அங்கு பேசிய தமிழிசை, " புதுச்சேரியில் நோய்தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது. வாரம் வியாழக்கிழமைகளில் நடைபெறும் கோவிட் மேலாண்மைக் கூட்டங்களில் சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
நேற்றைய கூட்டத்தில் கரோனா கட்டுப்பாடு சூழ்நிலை திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தார்கள். அதற்காக சுகாதாரத் துறை, அனைத்துத் துறைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டியது அவசியம். தற்போதைய கரோனா இறப்புகள் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்யப்படும்.
மேலும் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கைவந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டாகிவிட்டது. முதற்கட்டமாக அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படலாம். அதனைத் தொடர்ந்து சூழலை கண்காணித்து பிறகு மற்ற கல்வி நிலையங்கள் படிப்படியாகத் திறக்கப்படும்.
கட்டுப்பாட்டுக்குள் இருப்பது ஆறுதலான செய்தி. பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை இணையவழியில் பெறுவதற்கான இணையவழி சேவை நேற்று தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. பட்டா ஆவணங்களையும் இணையவழியில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தற்போதைய சூழலில் இது மக்களுக்கு பேருதவியாக இருக்கும்" என்றார்.