புதுச்சேரி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், தமிழ்நாடு அரசைப்போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை விசிக எம்பி ரவிக்குமார் சந்தித்து மனு அளித்தார்.
இந்த நிலையில் இது குறித்து புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஜூலை.14) தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆதிதிராவிடர் அமைச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் எம்எல்ஏக்கள் திருமுருகன், பி.ஆர்.சிவா, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமருக்கு கடிதம் எழுத முடிவு
தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ”காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதால் காரைக்கால் விவசாயம் பாதிக்கும். புதுச்சேரிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும். எனவே அணை கட்டுவதை நிறுத்த பிரதமருக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் புதுச்சேரி அரசு சார்பில் கடிதம் எழுதப்படும்” என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசுக்கு அனைத்துவிதத்திலும் அறிக்கை உதவியாக இருக்கும் - ஏ.கே. ராஜன்