புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைs சந்துத்து பேசியதாவது, “காலாப்பட்டிலுள்ள மருந்து தொழிற்சாலையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த தொழிலாளர்களில் ஒருவர் குழந்தைத் தொழிலாளர். காலாப்பட்டு தொழிற்சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி உள்பட பாஜகவினர், நாங்கள் அனுமதி அளித்ததாக பொய் புகார் கூறி வருகின்றனர். தொழிற்சாலைகளின் பாதுகாப்பு வசதிகளை தொழிலாளர் துறையும், மாசு கட்டுப்பாட்டுத் துறையும் ஆய்வு செய்யாமல் இருந்ததே இதற்கு முக்கிய காரணம். இதனால்தான், தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடல் உறுப்பு தானம் செய்த ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு தமிழக அரசு மரியாதை
தொழிற்சாலையைப் பொறுத்தவரை, காலாப்பட்டு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தொழிற்சாலை நிறுவனத்தோடு கைகோர்த்துக் கொண்டு, அனைத்து தொழிற்சங்கத்தையும் கையில் வைத்துக் கொண்டு, அவர் சர்வாதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறார். இந்த தொழிற்சாலையில் 95 சதவீத முறைகேடுகள் நடக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பித்தபோது, அங்கு குடியிருப்புகள் இல்லை. தற்போது குடியிருப்புகள் வந்ததால், பாதிப்பு எனத் தெரிந்ததும் மூடி விட்டனர். காலாப்பட்டு தொகுதி மக்கள், ஆலையை மூட வேண்டும் என்றனர். காங்கிரஸ் ஆட்சியில் அதை மூட வேண்டும் என நாங்கள் தெரிவித்தோம். ஆலையை மூடுவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
இது மிகப்பெரிய விபத்து, புதுச்சேரியின் பாதுகாவலர் என கூறப்படும் முதலமைச்சர், இதைப் பற்றி எதுவும் பேசாமல் மவுனமாக உள்ளார். ஆனால் ஆளுநர் தமிழிசை, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பதில் கூறுகிறார். விசாரணை என்பது தொழிற்சாலைக்கு சாதகமாகவே இருக்கும்.
இந்த விபத்தை பூசி மெழுகி தொழிற்சாலைக்கு சாதகமாக செயல்படும் வேலையை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தொழிற்சாலை செயல்படக்கூடாது என உத்தரவிட்டும், ஆலை தொடர்ந்து இயங்குகிறது. பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை; இன்று 7 லட்சம் பேருக்கு ரூ.1,000 வரவு.. முதலமைச்சர் தலைமையில் விழா!