புதுச்சேரி: புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (மார்ச் 26) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ”காங்கிரஸ்-திமுக ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரிக்கு 8 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேகதாது அணை கட்டுவதை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியின்போது ஒருமனதாக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்
எனவே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை உடனடியாக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், நடப்பு மக்களவைக் கூட்டத் தொடரிலேயே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை முன்னாள் கவர்னர் கிரண்பேடி மீறியதாக நீதிமன்றத்தில் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது என்றும், இந்த வழக்கு விசாரணையின்போது தான் நீதிமன்ற உத்தரவை மீறி இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக நீதிமன்றத்திற்க்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்த நாராயணசாமி இதிலிருந்து அவர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் என்பதும் தெளிவாகி உள்ளது என்று குறிப்பிட்டார்.
சட்டப்பேரவை முழுவதும் புரோக்கர்கள் ஆதிக்கம்
ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆள் கடத்தல், பணம் பறிப்பது, போலி பத்திரங்கள் மூலம் நிலத்தை அபகரிப்பது என்பது தொடர் கதையாக இருந்தாலும் அது போல் தான் தற்போதும் நடந்து வருவதாக தெரிவித்த அவர் சில அரசியல்வாதிகளின் உதவியோடு ஆளுங்கட்சியினர் நில அபகரிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
ஆட்சி அமைந்தது முதல் ரங்கசாமி அரசு ஊழலில் திளைத்து இருப்பதாகவும் சட்டப்பேரவை முழுவதும் புரோக்கர்கள் நிறைந்த இடமாக மாறி உள்ளதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். ரங்கசாமியின் அரசு என்ன சாதனை புரிந்து விட்டது எனக் கேள்வி எழுப்பிய நாராயணசாமி மாநில அந்தஸ்து பெற்று விட்டார்களா? மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை இணைத்து விட்டார்களா? அதிக நிதி பெற்று விட்டார்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
ஒரு வருடம் ஆன பிறகு யார் என்ன ஊழல் செய்தார்கள் என்ற பட்டியலை முழுவதுமாக காங்கிரஸ் கட்சி வெளியிடும் என்று அவர் தெரிவித்தார்.