புதுச்சேரி: மீனவர்கள் சுருக்குவலைகளைப் பயன்படுத்த தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் சுருக்குவலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி வீராம்பட்டினம் விடுத்து 17 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளிக்க சட்டப்பேரவை நோக்கி வந்தனர்.
தொடர்ந்து, சட்டப்பேரவை அருகே தடுப்புகளை அமைத்து, இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து சுமார் இரண்டு மணி நேரம் மீனவர்கள் அங்கேயே காத்திருந்தனர்.
இதனையடுத்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, இது குறித்து முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவப் பிரதிநிதிகளிடம் சபாநாயகர் உறுதியளித்ததை அடுத்து, மீனவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
சட்டப்பேரவை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் திடீரென குவிந்ததால் சட்டப்பேரவை வளாகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.