புதுச்சேரி: கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் லாட்டரி டிக்கெட்டுகளும், அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுவருவதாக புதுச்சேரி நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ள காணொலி பதிவில், “புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடிகள் உள்ளன என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சுட்டிக்காட்டியது. ஆனால் அதைத் தேர்தல் ஆணையமும், மாநில அரசும் பொருட்படுத்தவில்லை.
அரசுக்கு எதிராக காங்கிரஸ் இறங்கும்
இது தொடர்பான உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தவறு நடந்தது உண்மைதான் என மாநில அரசு ஒத்துக்கொண்டது. புதுச்சேரி அரசுக்குப் பெருத்த அவமானம். இது ரங்கசாமி அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மூன்று எண் லாட்டரி சீட் விற்பனை நடைபெறுகிறது. இது காவல் துறையின் கவனத்திற்குத் தெரியும். இதில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்துவருகின்றன. பொதுவெளியில் அப்பட்டமாக நடைபெறும் லாட்டரி விற்பனையை முதலமைச்சர் ரங்கசாமி வேடிக்கை பார்க்கின்றார்.
அதே போன்று புதுச்சேரியில் தலைவிரித்தாடும் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருள்கள் விற்பனையால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். புதுச்சேரியில் அமோகமாக நடக்கும் லாட்டரி, போதைப்பொருள்களைத் தடைசெய்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் புதுச்சேரி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் இறங்கும்” என எச்சரித்துள்ளார்.