புதுச்சேரி : சட்டப்பேரவையில் 2021-22 க்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று (ஆக.26) தாக்கல் செய்தார். இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த பட்ஜெட்டில் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான எந்தவித புதிய திட்டமும் இல்லை.
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை 9 ஆயிரத்து 924 கோடி ரூபாய்க்கு எந்த அளவில் வருமானத்தை பெருக்குவதற்கான விளக்கம் பட்ஜெட்டில் இல்லை. விவசாய கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். ஆனால் விவசாயிகள் வங்கிகள் மூலமாகத்தான் கடன் வாங்குகிறார்கள்.
பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் இல்லை
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனையும், வங்கிகளில் வாங்கிய கடனையும் முதலமைச்சர் ரங்கசாமி ரத்து செய்வாரா என்பதை அவர் விளக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக பட்டியலின மாணவர்கள் ஆதிதிராவிட நல மேம்பாட்டு கழகத்தில் பெற்ற கடனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே அவர்கள் பெருமளவு கடனை அடைத்துவிட்டனர். ஆகவே இது ஒரு மிகப்பெரிய அறிவிப்பு ஏதும் ஒன்றுமில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய 22 கோடி ரூபாயை நாங்கள் ஒதுக்கியிருந்தோம். இதுதவிர இந்த பட்ஜெட்டில் சிறப்பம்சங்களும் இல்லை.
விவசாயிகள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் புதிய தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு சலுகைகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இந்த அரசு கரோனாவை கட்டுப்படுத்த எந்த விதமான புதிய திட்டமும் அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
மருத்துவத்துறை புறக்கணிப்பு
கரோனாவின் மூன்றாவது அலை வர இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு எந்தவித திட்டமும் இல்லை. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆகவே மருத்துவத்துறை இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சர் ரங்கசாமியால் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை உப்புச்சப்பில்லாத நிதிநிலை அறிக்கை” என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் : கூட்டுறவு பயிர் மற்றும் கல்விக்கடன்கள் ரத்து!