புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில் கூறியிருப்பதாவது, ”புதுச்சேரியில் முதல்வராக ரங்கசாமி எப்போது எல்லாம் பதவி ஏற்கிறாரோ அப்போது எல்லாம் ரவுடியிசம் தலைதூக்கி வருகிறது.
கொலை நகரமாக மாறிய புதுச்சேரி
தற்போது பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசில் புதுச்சேரி கொலை நகரமாக மாறி வருகிறது. சமீபகாலமாக புதுவையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநிலத்தில் அமைதி சீர்குலைந்து வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெயரில், புதுச்சேரி அரசு விருது வாங்கி உள்ளது.
தலைதூக்கும் ரவுடியிசம்
ரங்கசாமி ஆட்சியில் பாத்திரக் கடைகள், துணிக்கடைகள், பெட்டிக்கடைகள், என அனைத்து கடைகளிலும் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டுகின்றனர். பெரிய பெரிய தொழிற்சாலைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மாமூல் கேட்டு தொல்லை கொடுக்கின்றனர்.
ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி புதுச்சேரியில் மக்கள் அமைதியாக வாழ தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள்.
அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்பதை ரங்கசாமி தலைமையிலான அரசு உணர்ந்து செயல்பட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
புதுச்சேரி அரசின் திறமையின்மை
தடுப்பூசி இலவசமாகக் கொடுப்பதால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. 100 கோடி தடுப்பூசிகள் செலுத்திவிட்டதாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 20 விழுக்காடு நபர்கள்.
புதுச்சேரியில் மாநில அரசின் திறமையின்மையால் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விலை உயர்ந்து வருகிறது. எனவே இந்த விலைகளைக் கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'புதுச்சேரியில் லாட்டரி டிக்கெட், கஞ்சா அதிகரிப்பு'