புதுச்சேரி: நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது, “நரேந்திர மோடியும், அமித் ஷாவும் புதுவையில் விதைத்த விதையின் பலனை உத்தரப் பிரதேசத்தில் பார்த்துவருகிறார்கள்.
2021ஆம் ஆண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ, அமைச்சர்களை, அமலாக்கத் துறை மூலம் மிரட்டி பொய் வழக்குப் போடுவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர்களை இழுத்து, சுமார் ஆறு பேரை பாஜக வேட்பாளராக நிறுத்தினார்கள்.
பாஜகவின் யுக்தியே அவர்களுக்கு எதிராக...
பாரதிய ஜனதா புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க எந்த யுக்தியைக் கையாண்டதோ, அதுவே தற்போது உத்தரப் பிரதேசம், கோவா, ஜார்கண்டில் அவர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.
நரேந்திர மோடியும், அமித் ஷாவும் கட்சி நடத்தாமல் வியாபாரம் செய்கிறார்கள். முதலீடு செய்வது, ஆள்களை விலைக்கு வாங்குவது, கோடிகளை கொடுத்து ஆட்சியைப் பிடிப்பது எனக் கேவலமான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
மக்களை நம்பாமல் பணபலத்தை மட்டும் நம்பி யார் ஒருவர் தேர்தலைச் சந்திக்கிறார்களோ அவர்களுக்கு அழிவு நிச்சயம். அரசியல் வியாபாரம் காரணமாக புதுச்சேரியில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு சந்தி சிரிக்கிறது.
மக்களுக்கான ஆட்சி இல்லை
ஒரு தான்தோன்றித்தனமான ஆட்சி நடக்கிறது. குறுக்கு வழியில் மோடியும் அமித் ஷாவும் கோடிகளைச் செலவுசெய்து ஆட்சியைப் பிடித்தால் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்க முடியாது. இனிமேலும் இவர்கள் இரண்டு பேரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. ஆனால் இதையும் மீறி தற்போது கொண்டாட்டங்கள் இருந்ததால் கரோனா தொற்றால் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐசியு வசதி இல்லை, ஆக்சிஜன் வசதி இல்லை, படுக்கை இல்லை இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டிய முதலமைச்சரும், ஆளுநரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் மட்டுமே வைரஸை ஒழிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்
பொதுமக்களின் இந்தப் பாதிப்பிற்கு முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரியில் வேலையில்லாத் திண்டாட்டங்கள் அதிகமாக உள்ளன. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின்கட்டண உயர்வை ரத்துசெய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Nun rape case: பாலியல் வழக்கில் பிஷப் பிராங்க்கோ விடுவிப்பு