புதுச்சேரி அரசின் மின்துறை தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஐந்தாம் நாள் போராட்டமான நேற்று(அக்.02) இரவு உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தில் மின்துறை ஊழியர்களின் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. இதனையடுத்து ஊழியர்களை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு காவல் துறையினர் துணை ராணுவத்தினர் உதவியோடு வலியுறுத்தினர்.
ஆனால், அதையும் தாண்டி மின்துறை ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஒலி பெருக்கி மூலம், ஊழியர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்ததுடன் 10 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி மின் துறை தலைமை அலுவலகத்தின் இரண்டு கதவுகளையும் திறந்து வைத்தார்.
இதனையும் மீறி ஊழியர்கள் அலுவலகத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் துணை ராணுவத்தினர் உதவியுடன் ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய உள்ளே நுழைந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள், அமைச்சர் நமச்சிவாயம் ஒழிக என்ற கோஷத்துடன் வெளியேறி தானாக முன்வந்து கைதானார்கள்.
இதனை அடுத்து ஐந்து பேருந்துகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகம் முழுவதும் துணை ராணுவம் மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று விழா ஒன்றில் பேசிய ஆளுநர் தமிழிசை, பொது மக்களுக்கு இடையூறு செய்யும் யாரையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதைத்தெளிவாக கூறுகிறேன். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று துணைமின் நிலையத்தில் பியூஸ் பிடுங்கியதால், செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதால் மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. நிச்சயமாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது. பொதுமக்களுக்காக தான் இந்த முடிவு. நேற்று நடைபெற்ற அனைத்தும் விஷமத்தனமாக திட்டமிட்டு செய்யப்பட்டது தான். பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்பட்டது. அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.
யார் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கை எதுவாக இருந்தாலும் போராட்டம் செய்வது நல்லதல்ல. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஏஸ்மா சட்டம் பாயும்’ எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நேற்று இரவு கைது செய்யப்பட்ட மின்துறை ஊழியர்கள் காலை விடுதலை செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி வழங்குக - ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் வென்றவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்