புதுச்சேரி: திமுக சார்பாக லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் திருவள்ளுவர் தினவிழா இன்று (ஜன.15) கொண்டாடப்பட்டது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு புதுச்சேரி திமுக அமைப்பாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவா, "புதுச்சேரி அரசு தரப்பில் மக்களுக்கு தீபாவளி அரிசியும் வழங்கப்படவில்லை.பொங்கல் தொகுப்பும் வழங்கபடவில்லை.
இனி வழங்கியும் பயனில்லை. முற்றிலும் செயல்படாத அரசாக ரங்கசாமி அரசு இருந்து வருகிறது. பாஜக-என்ஆர்காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்காக செய்யப்படவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளைப் போல் தற்போதும் பாஜக புதுச்சேரி வளர்ச்சியை முடக்கியுள்ளது. முதலமைச்சரை தனிமைப்படுத்துவதாக நினைத்து மக்களை பாஜக பழிவாங்குகிறது. புதுச்சேரி மக்களின் குரலை எதிரொலிக்கும் போராளியாக திமுக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இந்தநிகழ்ச்சியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனிப்பால் கென்னடி, செந்தில் குமார், கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு!