புதுச்சேரி: ஏனாம் தொகுதி ஆந்திரா மாநிலத்தையொட்டி கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மல்லாடி கிருஷ்ணாராவ் வெற்றி பெற்று வந்தார். இதனிடையே காங்கிரஸில் இருந்து விலகிய மல்லாடி கிருஷ்ணாராவ், என்ஆர்காங்கிரஸில் இணைந்தார்.
இதனால் கடந்த தேர்தலில் ஏனாம் தொகுதியில் ரங்கசாமி போட்டியிட்டார். இவருக்கு எதிராக கோலப்பள்ளி சீனிவாச அசோக் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து பாஜகவுக்கும் ஆதரவளித்து வந்தார். இதற்கிடையில் கடந்த மாதம் தனது தொகுதியில் பணிகளை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்திருந்தார்.
கடந்த வாரம் தனது தொகுதியில் பணிகளை ரங்கசாமி அரசு இன்னும் நிறைவேற்றாமல் காலம் கடத்துவதாக அவதூறாக பேசிய கோலப்பள்ளி சீனிவாச அசோக், ஏனாம் தொகுதிக்குள் முதலமைச்சரை நுழையவிடமாட்டோம் என பேசியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இவரை கண்டித்து புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் மறியல் மற்றும் டிஜிபி இடம் மனு அளித்திருந்தனர்.
ஜனவரி 6ஆம் தேதி அன்று முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து கோலப்பள்ளி சீனிவாச அசோக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். மேலும் நேற்று (ஜன 7) கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கு கடையடைப்பு நடைபெற்றது. இதற்கிடையே நேற்று (ஜன 7) ஏனாம் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அரசின் 19ஆம் ஆண்டு கலை விழா நடைபெற்றது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார். இவ்விழாவை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசன் அசோக் புறக்கணித்தார்.
இந்த பரப்பான அரசியல் சூழலில் ஏனாம் தொகுதிக்கு இன்று (ஜன.8) புறப்பட்டார் ரங்கசாமி. தொகுதிக்குள் முதலமைச்சரை நுழையவிடமாட்டோம் என கொல்லப்பள்ளி சீனிவாசன் அசோக் கூறியிருந்ததால், ஏனாம் மற்றும் ஆந்திர எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக எம்பி மீதான கொலை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு