பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அன்று பிரெஞ்சுக் கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இந்தியாவுடன் புதுச்சேரி இணைவது பற்றி கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று பிரான்ஸ் பார்லிமென்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுவரை நவம்பர் 1ஆம் தேதியன்று புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
1962 ஆண்டு பின் புதுச்சேரி சுதந்திர தினம் நவம்பர் 1ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 16ஆம் தேதி மாற்றப்பட்டது.
புதுச்சேரியில் உண்மையான விடுதலை நாள் நவம்பர் 1ஆம் தேதி என்றும், அன்றைய தினத்தை விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.
இதையடுத்து 2014 ஆம் ஆண்டு முதல் நவம்பர் ஒன்றாம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாகவும் அரசு விடுமுறை நாளாகவும் அரசு அறிவித்தது.
நவம்பர் 1ஆம் தேதியான இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், வேளாண்மை இயந்திரமாக்கி மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களில் பொது விசாயிகளுக்கு ரூ.50.85 லட்சமும், விவசாயிகளுக்கு ரூ.22.35 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளத்தைப் பெருக்குவதன் மூலம் நடப்பாண்டு இலக்கு பால் உற்பத்தி 49.650 மெட்ரிக் டன் என்ற அளவிலும் முட்டை உற்பத்தி 113.80 லட்சம் என்ற அளவிலும் இறைச்சி உற்பத்தி 14.637 மெட்ரிக் டன் என்ற அளவிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கறவை மாட்டு தீவனம் மற்றும் கன்று தீவனம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களில் உறுப்பினர்களாக அல்லாதவர்களுக்கு 75 விழுக்காடு மானிய விலையில் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
காரைக்கால் பிராந்தியத்தில் வட்டாரப் போக்குவரத்து ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக புதுச்சேரியில் 10 ஏக்கர் நிலமும் காரைக்காலில் 3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 50ஆயிரம் வழங்கும் திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது. இதுதவிர பேரிடர் துறை மூலமும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் மட்டுமின்றி வாரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் விதத்தில் சுற்றுலா கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
12ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். புதுச்சேரி அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பள்ளி அரசு பள்ளியாக மாற்றப்படுகிறது. புதுச்சேரியில் பள்ளி திறக்கும் தினமான நவம்பர் 8இல் இருந்தே மதிய உணவு வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 32 ரவுடிகள் மீது குண்டாஸ் பரிந்துரை - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்