புதுச்சேரி: நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக 1930களில் விடுதலை வேட்கை உச்சத்தை அடைந்திருந்தது. அதே நேரத்தில் கோவாவை ஆண்ட போர்த்துக்கீசியர்கள், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம், சந்திர நாகூர் ஆகிய பகுதிகளை ஆண்ட பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் விடுதலை போராட்டம் நடந்து வந்தது.
1934ஆம் ஆண்டு புதுச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய பகுதிகளுக்கு மகாத்மா காந்தியும், 1936ல் நேரு புதுச்சேரிக்கும், விழுப்புரம் பகுதிக்கு சுபாஷ் சந்திரபோசும் வந்தனர். இவர்களின் வருகை விடுதலை தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராகப் புதுச்சேரியில் போராடியவர்களுக்கு இந்தியத் தலைவர்கள் பல ஆலோசனைகளையும் வழங்கி வந்தனர். 1945ல் தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி புதுச்சேரியில் பிரெஞ்சு அரசுக்கு எதிரான விடுதலை போராட்டம் தீவிரமடைந்தது.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்தது. ஆனால் புதுச்சேரியும், அதன் பிராந்தியங்களும் பிரெஞ்சு காலனியாகவே தொடர்ந்தது. இதையடுத்து பிரெஞ்சு அரசு 1954ல் பிரெஞ்சு பிரதிநிதிகளின் கருத்துக்களை வாக்கெடுப்பு நடத்திக் கேட்டறிந்தது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சு பிரதிநிதிகள் 192 பேரில் 178 பேர் வாக்களித்தனர். இதில் 170 பேர் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாகவும், 7 பேர் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர்.
1954 அக்டோபர் 24ம் தேதி இந்தியப் பிரதமர் நேருவும், பிரெஞ்ச் தூதர் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்மூலம் நிர்வாக மாற்றம் ஏற்பட்டது. 1954 அக்டோபர் 30ந் தேதி டியூப்ளே சிலை முன்பு பிரெஞ்சுக்காரர்கள் ஒன்று கூடி அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கப்பல் ஏறி விடைபெற்றனர்.
நவம்பர் 1ந் தேதி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு, இந்தியத் தேசியக்கொடி ஏற்றப் பட்டது. இந்த நாளை புதுச்சேரி விடுதலை நாளாக புதுச்சேரி அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி இன்று (நவ 01) புதுச்சேரியின் 69-வது விடுதலை நாள் விழாவையொட்டி அரசு விடுமுறை அளித்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இதையும் படிங்க: தங்கலான் படத்தின் டீசர் வெளியீடு!