புதுச்சேரி: தமிழ்நாட்டில் மருத்துவ கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கவுள்ளதைப் போல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அம்மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதனை அவர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவிற்காக அனுப்பி வைத்தார்.
இதனால் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், நேற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோருடன் நேற்று மாலை டெல்லி விரைந்தார்.
இதையடுத்து, இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர்கள் சந்திக்க உள்ளனர். அப்போது மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு கோப்புக்கு அனுமதி அளித்தல், மத்திய அரசு முன்னதாக அனுப்பியுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை சட்டமாக்கவும் அனுமதி அளிக்க வலியுறுத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு நிலத்தில் கிரிக்கெட் மைதானம்: எப்ஐஆர் பதிவு செய்ய ஆட்சியருக்கு கிரண்பேடி உத்தரவு...!