புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதற்காக சட்டமன்றத்திற்கு வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனுக்கு காவலர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் துணைநிலை ஆளுநர் தனது உரையை தொடங்கினார்.
அவை தொடங்குவதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் 8 பேரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். இவர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது ஆளுநர் உரையாற்றக் கூடாது, பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் வேலை செய்கிறார் என கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து அவைக்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கை முன்பு, “மக்களாட்சி மாண்பை குறைக்காதே... பட்ஜெட் என்னாச்சு.. மாநில அந்துஸ்து என்னாச்சு” என கோஷமிட்டனர். இதனையடுத்து துணைநிலை ஆளுநர் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
இதையும் படிங்க: ’காடுகளும் புலிகளும் காக்கப்பட வேண்டும்..!’ - தமிழிசை சௌந்தரராஜன்