புதுச்சேரி : புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக புதுசேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் இறுதிச் சடங்கு செலவு முழுவதையும் அரசே ஏற்று அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,
புதுச்சேரியில் முதன்முறையாக பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளதாகவும், இதற்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசை பற்றி தவறான அவதூறு செய்திகளை மக்களிடம் பொய்யாக பரப்பிவரும் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நமச்சிவாயம், சாய் சரவணகுமார், ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜக முக்கிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.