புதுச்சேரி: இந்திய நாட்டில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் நடப்பு கல்வியாண்டில் (2023-2024) தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதைச் சார்ந்த 101 இணைப்புக் கல்லூரிகளிலும் தேசியக் கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கையில் நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து, தங்களுக்கு "புதிய கல்விக்கொள்கை வேண்டாம்" என்ற கோஷங்களை எழுப்பி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறும்போது, "தற்போது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு வரை 4 பருவத் தேர்வுகளுக்குத் தமிழ்ப் பாடம் கட்டாயமாக உள்ளது. ஆகையால், தமிழ்ப் பாடங்களை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய கல்விக் கொள்கையின்படி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2 பருவத் தேர்வுகளுக்கு மட்டுமே தமிழ்ப் பாடம் உள்ளது. 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு விருப்பத் தேர்வாக தமிழ்ப் பாடம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், தமிழ் பாடத்தை மத்திய அரசு புறக்கணிக்கும் வேலையைச் செய்து வருகிறது. எனவே, தற்போது உள்ள பாடப் பிரிவுகள் அனைத்தும் கட்டாயமாக இருக்க வேண்டும். தமிழ் கட்டாயப் பாடமாகக் கொண்டு வர வேண்டும். மேலும், தற்போது இருக்கும் பாடத்திட்டத்தை எடுக்கக் கூடாது. கூடுதலாக எந்தப் பாடத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். புதிய கல்விக் கொள்கையில் தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீசார், பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 8,833 பேர் தகுதி நீக்கம்.. அரசு கூறும் காரணம் என்ன?