புதுச்சேரி கடன் ரூபாய் 9,449 கோடியில் 72 விழுக்காட்டை ஏழாண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாக கணக்குத் தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேச அரசுகள் சட்டம் 1963 - 49ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவர் தனது தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (செப். 1) சமர்ப்பித்தார்.
அதில், "2020ஆம் ஆண்டுடன் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில் நிதி தொடர்பான முக்கிய அம்சங்கள், விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கடந்த 2015-16ஆம் ஆண்டில் ரூ. 7,754 கோடியாக இருந்த நிலுவை கடன்கள் ரூ. 9,449 கோடியாக அதிகரித்துள்ளது.
மொத்த கடனில் 72.51 விழுக்காட்டை அடுத்த 7 ஆண்டுகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டிய நிலை புதுச்சேரி அரசுக்கு உள்ளது. பணம் பெற்று வழங்கும் பல்வேறு அலுவலர்களால் பெறப்பட்ட ரூபாய் ரூ. 114.62 கோடிக்கான தற்காலிக முன்பணம் சரிக்கட்டப்படாமல் இருந்தது.
அத்துடன் ரூ. 15.75 கோடிக்கான தற்காலிக முன்பணம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சரி கட்டாமல் இருந்தது. கடந்த மார்ச் 2020வரை பல்வேறு அரசு துறைகளில் ரூ. 27.88 கோடிக்கு அரசு பணம் முறைகேடு, திருட்டு மற்றும் பண கையாடல் செய்யப்பட்டுள்ளன .
6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 22.05 கோடி லாபத்தையும், ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் ரூபாய் 52.37 கோடி நஷ்டத்தையும் அடைந்தன. 12 அரசு நிறுவனங்களின் கணக்குகளில் இறுதி செய்யப்படாமல் இருந்தன" என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.