புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் இன்று (ஜன.03) மத்திய இணை அமைச்சர் கிஷன்ரெட்டியை புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ், திமுக., கூட்டணி மக்கள் நலனுக்கும், மாணவர்கள் நலனுக்கும் விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 4ஆம் தேதி முதல் திறப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கே பற்றாக்குறை உள்ளது. தற்போது உடல் வெப்ப சோதனை கருவி, அடிக்கடி கிருமிநாசினி தெளித்தல், வகுப்பறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள போதிய ஆசிரியர்களோ, ஊழியர்களோ இல்லை. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் செய்கின்றன. மாணவர்களின் நலனைப்பற்றி அவர்கள் துளியும் அக்கறை செலுத்தவில்லை. இதனை புதுச்சேரி அரசின் கல்வித்துறையும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யவில்லை.
புதுச்சேரியில் கிராமப்புற பள்ளி மாணவர்கள் நகர பகுதிக்கு வந்து படித்து செல்கின்றனர். போதிய போக்குவரத்து வசதிகளை செய்து தராத புதுச்சேரி அரசு, மாணவர்கள் சொந்த வாகனத்தில் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளை அவசர கதியில் திறப்பது அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்து இறுதி முடிவெடுக்க வேண்டும். இந்த ஆய்வு முடியும்வரை புதுச்சேரியில் பள்ளிகளை திறக்க அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு!