புதுச்சேரி: புதுவையில் கடந்த ஏப்ரலில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது.
தற்போது அந்த தேர்வுகளுக்கான முடிவுகளை முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி பேசியது, “10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி - காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12%. புதுச்சேரி - காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92% ஆகும். கடந்த ஆண்டு அரசு, தனியார் பள்ளிகளில் 92.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.
அரசுப் பள்ளிகளில் மட்டும் 85.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 3.8 சதவீதமும், அரசுப் பள்ளிகளில் மட்டும் 6.09 சதவீதமும்
குறைந்துள்ளது’’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ’’புதுச்சேரி - காரைக்காலில் மொத்தம் 287 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் புதுச்சேரியில் 84, காரைக்காலில் 7 என மொத்தம் 91 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி - காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 107. இதில் புதுச்சேரியில் 7 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் கணிதத்தில் 61, அறிவியலில் 49, சமூக அறிவியலில் 19 பேர் என மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்’’ என்றும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மேலும், ’’கரோனா காலகட்டத்தில் 2 ஆண்டுகளாகப் பள்ளிகள் இயங்கவில்லை. அதோடு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியும் அளிக்கப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிவிகிதம் மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும் 100 சதவீத தேர்ச்சியை நோக்கியே அரசு செல்கிறது. ஆனால், தனியார் பள்ளிகளோடு அரசுப் பள்ளிகளை ஒப்பிடக்கூடாது.
தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் யார்? அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறையில் நாம் முதலிடம் வகித்து வருகிறோம். அரசுப் பள்ளிகளை சிபிஎஸ்இ தரத்துக்கு உயர்த்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்” என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
பேட்டியின் போது உடனிருந்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியது, “கரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தோம். பள்ளிகளும் இயங்காததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கலாம். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை நன்றாகப் படிக்கும் மாணவர்களை மட்டுமே பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனாலும், புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆராயக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கிராமப்புறங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகள்தான் 100 சதவீத தேர்ச்சி அளிக்கிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 127 பள்ளிகளில் தற்போது வரை 116 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு ஏற்ப பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு என தற்போது பயிற்சி அளித்து வருகிறோம்.
ஆங்கிலம், தமிழ்ப் பாடத்துக்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும். அகில இந்திய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிபிஎஸ்இ பள்ளிகளாக, அரசுப் பள்ளிகளை மாற்றியுள்ளோம். சிபிஎஸ்இ பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வரும்காலங்களில் நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெறுவார்கள்” என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி:-
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விவகாரத்தில் கலால்துறை துணை ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரா? என்ற கேள்விக்கு, “அதிகாரிகள் இடமாற்றம் என்பது நிர்வாகத்தில் அவ்வப்போது நடைபெறுவதுதான். அந்த அடிப்படையில்தான் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.
புதுச்சேரியில் இருந்துதான் கள்ளச் சாராயம் தமிழ்நாட்டுக்கு கடத்தப்பட்டதாக தகவல்கள் வருகிறதே? என்ற கேள்விக்கு, “இதுபற்றி முழு தகவல்கள் கிடைத்தவுடன் பதில் அளிக்கிறேன். தமிழ்நாட்டில் விசாரித்து வருகின்றனர், புதுச்சேரியிலும் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.
மேலும் விஷச் சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று புதுச்சேரி முதலமைச்சர் பதவி விலக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாரே? என்ற கேள்விக்கு, ''இதுபற்றி முழு தகவல்கள் கிடைத்தவுடன் பதில் அளிக்கிறேன்'' என்றும் ரங்கசாமி பதிலளித்தார்.
புதுச்சேரி கலால்துறை செயல்பாடுகள் திருப்தியளிக்கிறதா? என்ற கேள்விக்கு, ’’கலால்துறை கடந்த ஆண்டு பல கோடி அரசுக்கு வருவாய் ஈட்டித்தந்துள்ளது. அறிவித்த அனைத்து திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றும்” என்றும் முதலமைச்சர் பதிலளித்தார்.