புதுச்சேரி: அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன்(32). இவர் தமிழ்நாடு எல்லைப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக 7 வயது மகன் பிரதீசுடம் சென்று விட்டு, தீபாவளியை கொண்டாட இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் நாட்டுப் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, கோட்டக்குப்பம் கிழக்குக்கடற்கரை சாலை சந்திப்பில் வந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக, சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த நாட்டுப் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தந்தை மகன் உயிரிழப்பின் எதிரொலி
விபத்தின்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஷர்புதீன், கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால், இருமாநில காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (நவ. 5) புதுச்சேரி மேற்குப் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கலாம்பாக்கம், கோர்காடு, சன்னியாசிக்குப்பம், திருக்கனூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் உள்ள நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் மற்றும் பட்டாசுக் கிடங்குகளில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, பட்டாசு தயாரிக்க மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கேட்டறிந்ததுடன், அங்கிருந்த இருப்புகள், யார், யாருக்குப் பட்டாசு, வெடிமருந்து விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் சேகரித்தனர்.
தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்தாலும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: சிசிடிவி பதிவு: நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய வாகனம் - தந்தை, மகன் உயிரிழப்பு!