புதுச்சேரி: ஒன்றிய அரசின் தேசிய மீன்வள மசோதா 2021க்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி நகர் வடக்கு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல், படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கடற்கரையில் திரண்ட மீனவர்களும் மீன் விற்கும் பெண்களும் கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மீனவர்கள் கடலுக்குள் இறங்க முயன்றபோது காவல் துறையினர், அவர்களை சமாதானப்படுத்தி கரைக்கு அழைத்து வந்தனர்.
இதுபோல் விசைப்படகு மீனவர்களும், படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி இருந்தனர். இவர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது, ‘தேசிய கடல் வள மசோதாவால் மீனவர்கள் தினமும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது அனுமதி பெறவேண்டும். மீனவர்களை கடலோர காவல்படை கண்காணிப்பதுடன் புதிய விதிகளை மீறியதாக கருதினால் படகு, மீன் வலைகளை பறிமுதல் செய்யும்.
தனியாருக்கு சாதகமான பல அம்சங்கள் இதில் உள்ளன. இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு - மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!