புதுச்சேரி: சட்டப்பேரவை 15ஆவது கூட்டத்தொடரில் ஆறாம் நாள் கூட்டத்தொடர் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை உரை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.
புதுச்சேரி திமுக சட்டப்பேரவைத் தலைவர் சிவா பேசுகையில், "கடந்த காலங்களில் முன்னாள் முதலமைச்சருக்குச் சிலை வைப்பதற்கு இடத்தைத் தேர்வுசெய்தார்கள். ஆனால், கமிட்டி போடவில்லை, தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். உங்களால்தான் இது நடக்கும் நீங்கள்தான் கருணாநிதிக்குச் சிலை அமைக்க முடியும்" என்றார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில், நம்ம ஊரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் சண்முகத்திற்குச் சிலை வைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். பாஜக எம்எல்ஏ அசோக் பாபு, முன்னாள் பிரதமர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் வாஜ்பாய்க்குச் சிலை வைக்க வேண்டும் என்றார்.
சுயேச்சை எம்எல்ஏ ஒருவர், "வேளாண் சட்டம் தொடர்பாக பல மாநிலங்களில் சட்டப்பேரவையில் எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்" என்றார்.
புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள் ஒரே குரலாக சட்டப்பேரவையில் இது பற்றி பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயகத்தை முழுகடிக்கப் பார்க்கிறீர்களா என ஆவேசமாகப் பேசினர். இதனால் அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் அனைவரையும் அமைதிப்படுத்தினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் மூன்று பேர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.