மீண்டும் மதிய உணவு
புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கரோனா பொது முடக்கத்தால், அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டுவந்த மதிய உணவு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மதிய உணவு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் இன்றுமுதல் (மார்ச் 2) மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, மகேஸ்வரி ஆகியோருடன் கிராமப்பகுதியில் உள்ள கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேனிலைப்பள்ளி, சிறுவர் பள்ளியில் நேரில் சென்று மதிய உணவு வழங்குவதைப் பார்வையிட்டார்.
உணவின் தரம் ஆய்வு
பள்ளியிலேயே மதிய உணவை வாங்கி, துணைநிலை ஆளுநர் தமிழிசை உண்டு பார்த்து தரத்தையும் ஆய்வுசெய்தார். பள்ளிகளில் கொடுக்கப்பட்டுவரும் உணவுப் பொருள்களின் தரத்தைக் கேட்டறிந்து, தொடர்ந்து மாணவர்களுக்குத் தரமான உணவைத் தயாரித்து கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.