புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சிக்கட்டிலில் தற்போது அமர்ந்துள்ளது. இந்த அரசின் அமைச்சரவை விரிவாக்கம் கடந்த 27ஆம் தேதி நடந்தது. புதுச்சேரியில் பாஜக சார்பில் இரண்டு பேரும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மூன்று பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
என்.ஆர். காங்கிரஸ் சார்பில் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோரும், பாஜக சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
பதவி இருக்கு... பலனில்லை
புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அமைச்சர்களுக்கு இலக்காக ஒதுக்கீடு செய்வதில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பாஜக அமைச்சர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சபாநாயகர் செல்வம் தலைமையில் அமைச்சர்களான நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், எம்எல்ஏக்களான கல்யாணசுந்தரம், ஜான்குமார் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் டெல்லி சென்றுள்ளனர். இன்று (ஜூலை.01) அவர்கள் 12 பேரும் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோரையும் சந்திக்கின்றனர். அப்போது, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும், மாநில அந்தஸ்து குறித்தும் விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது. மேலும், இரண்டு நாள்களுக்கு 12 எம்எல்ஏக்களும் அங்கு முகாமிடுகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் இழுபறி: மவுனம் காக்கும் முதலமைச்சர்