வங்கக் கடலில் உருவாகி தற்போது வலுவடைந்துள்ள நிவர் புயல் நாளை (நவம்பர் 26) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு தரப்பில் பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை வரை பொது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு விடுமுறை பொருந்தாது. அதேபோல, நவம்பர் 28ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள கடலோரம், தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் அனைவரும் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புயல் பாதுகாப்பு மையங்களில் மற்றும் இதர தங்கும் மையங்களில் ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை தந்துள்ளனர். இதுதவிர கடலோரப் பகுதிகளில் உள்ள சிறிய, பெரிய படகுகள் அனைத்தும் கரையோரங்களில் பத்திரமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிவர் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் மழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். வணிகர்கள் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு தர வேண்டும்” என குறிப்பிடபட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் நாளை விடுமுறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை!