பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டிற்கு செப்.27ஆம் தேதி வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைக் கண்டித்து கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் அமைப்பினரும், கன்னட ஆதரவு அமைப்பினரும் மைசூரு, மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் அடையாளமாக, மைசூரில் உள்ள கட்டளை பகுதி மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும், காவிரி மற்றும் கபினி வடிநில தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய விவசாயி ஒருவர், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், விளைந்த பயிர்கள் மற்றும் கர்நாடகத்தின் குடிநீர் தேவையை கணக்கில் கொள்ளாமல் தமிழ்நாட்டிற்கு சாதகமாக உத்தரவிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, கர்நாடகா பாதுகாப்பு வேதிகே அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என வலியுறுத்தி காந்திநகரில் போராட்டம் நடத்தினர். இது குறித்து வேதிகே அமைப்பில் தலைவர் டி.ஏ.நாராயண கவுடா கூறுகையில், “இது கர்நாடகாவுக்கு ஒரு கருப்பு நாள். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (Cauvery water management authority) உத்தரவை உறுதிப்படுத்தியதன் மூலம் உச்ச நீதிமன்றம் எங்களுக்கான கதவை மூடிவிட்டது. இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை நாங்கள் மீற வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஏனென்றால், நாங்கள் (கர்நாடகா) தண்ணீர் திறந்து விடும் நிலையில் இல்லை, எங்களிடம் உள்ள நான்கு அணைகளிலும் குடிப்பதற்காகக் கூட தண்ணீர் இல்லை. இது குறித்து டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காவிரி நீர் பங்கீடு: கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு - உச்ச நீதிமன்றம் அதிரடி!