சென்னை: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் இன்று(ஜனவரி 29) விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், நாட்டை வழிநடத்துவதற்குச் சிறப்பான தலைவர் மோடிதான் என்பதை காலம் கடந்து உணர்ந்துவிட்டேன். அதனால், பாஜகவில் இணைந்துள்ளேன். வரும் 31ஆம் தேதி புதுச்சேரிக்கு வரவுள்ள ஜே.பி. நட்டாவுக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு அளிக்கவுள்ளோம்.
புதுச்சேரியை 20ஆண்டுகள் பின்னோக்கி கொண்டுசென்றுவிட்டார், நாராயணசாமி. நான் அமைச்சராக இருந்த துறைக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாமல் பாரபட்சம் காட்டியதால்தான், ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தேன். இதனால், டெல்லி தலைமையே எங்கள் இருவரையும் அழைத்துப் பேசியது.
புதுச்சேரி முழுவதையும் போராட்டக்களமாக மாற்றிவிட்ட நாராயணசாமி, ஆளுங்கட்சி போல் செயல்படாமல் எதிர்க்கட்சிபோல் செயல்படுகிறார். அவருடன் இருக்கும் பலரும் ஒரு சில அழுத்தத்தின் காரணமாகவே அங்கு இருக்கின்றனர். அவர்களை சுதந்திரமாக செயல்படாவிட்டால், பலரும் பாஜகவில் இணைவார்கள். புதுச்சேரியில் பாஜக அரசு அமைந்தவுடன் மக்களுக்குத் தேவைப்படக்கூடிய அனைத்து நல்ல திட்டங்களையும் வழங்கி நல் ஆட்சிக் கொடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க: ’கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு எடுப்பார்’ - ஜி.கே. மணி