லக்னோ : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வாக்குறுதி (Pratigya Yatras) யாத்திரையை பாரபங்கி என்ற இடத்தில் சனிக்கிழமை (அக்.23) தொடங்கினார். இன்று தொடங்கும் இந்த வாக்குறுதி யாத்திரை நவம்பர் 1ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த யாத்திரை குறித்து காங்கிரஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பந்தேல்கண்ட் பாரபங்கியில் தொடங்கும் இந்த யாத்திரை லக்னோ, உன்னோவ், ஃபதேபூர், சித்திரகூட், பந்தா, ஹமீர்பூர், ஜலாலுன் வழியாக ஜான்சியில் நிறைவடையும்.
பின்னர், வாரணாசியில் தொடங்கி சந்தௌலி, சோன்பத்ரா, மிர்சாபூர், பிரயாக்ராஜ், பிரதாப்கர் மற்றும் அமேதி வழியாக ரேபரேலியில் யாத்திரை நிறைவடைகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையின்போது பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, விவசாய கடன்கள் மற்றும் மின்சார கட்டணம் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுப்பார். மேலும் இது தொடர்பாக அவர் தேர்தல் வாக்குறுதியும் அளிப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மகளிர் மட்டும்... அதிரடி காட்டும் பிரியங்கா.. உத்தரப் பிரதேசத்தை கைப்பற்ற பலே திட்டம்!
முன்னதாக காங்கிரஸ் சார்பில் மாநிலத்தில் 40 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது வாக்குறுதி யாத்திரையை பிரியங்கா காந்தி முன்னெடுத்துள்ளார்.
மேலும் யாத்திரையின்போது, பெண் வாக்காளர்களை கவரும் வகையில், மாணவிகளுக்கு ஸ்கூட்டி (இரு சக்கர வாகனம்), மொபைல் போன்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது, முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பில் உள்ளார். அங்கு, கடந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : பிகாரில் மகா கூட்டணி முறிவு ஏன்? கனையா குமார் பதில்!